மௌனம் எனும் மகாசக்தி.,
ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமர்சித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.
அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.
நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.
ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.
நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.
எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.
பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.
ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.
மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால்
வார்த்தைகளை
பயன்படுத்துங்கள்.....🌹🌹🌹
ஓஷோ
0 Comments