காமச்சாமியார்_ஓஷோ

*#காமச்சாமியார்_ஓஷோ*

*#கேள்வி* :

ஓஷோ , உங்களை ஏன் 'ஒரு காமச்சாமியார்' என்று மக்கள் கருதுகிறார்கள்?

*#ஓஷோபதில்*:

நீங்கள் ஒரு உடலுறவு வைத்தியரிடம் (Sex - Doctor) சென்றால் அவர் உடலுறவைப் பற்றி பேசாமல் புத்தரைப் பற்றியா பேசுவார்!

அப்பொழுது அவரை 'நீங்கள், காமவைத்தியர்' என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த முட்டாள்கள் என்னை அழைக்கிறார்கள்!

 அதற்கு நான் என்ன செய்வது?

என்னிடம் வரும் பெரும்பான்மையான கேள்விகள்,

 "என்னால் தியானம் செய்ய முடியவில்லை. பெண்கள் துரத்தித் துரத்தி வருகிறார்கள்.

தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது காமம் அதிகரிக்கிறது, என்ன செய்வது?

 சுய இன்பம் உடலுக்குக் கெடுதலா?'

சுய இன்பம் பாபகாரியமா?

இதிலிருந்து விடுதலை அடைவது எப்படி?......

இப்படியேதான் இருக்கின்றன! 😏😏😏

நானும் பழைய மதவாதிகளைப் போல, அது பாபம், இது தீங்கு, இது தெய்வக் குற்றம், கண் போய்விடும்..... அப்படி, இப்படி என்று மேம்போக்காகச் சொல்லி உங்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தலாம்.

ஆனால் அது என்னால் முடியாத காரியம்.

 பாலுணர்வு மற்றும் அதனுடைய பல பரிமாணங்களைப் பற்றி கூறுகிறேன்.

 நான் காமச்சாமியாரா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

(1). பசி உணர்வும், பாலுணர்வும் இயற்கை மனிதனுக்கு கொடுத்த அடிப்படையான உணர்வுகள். மற்ற உணர்வுகள் அனைத்தும் இவற்றுக்கு அடுத்ததுதான். இதில் பசி உணர்வு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், பாலுணர்வு தன் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் தேவையாக இருக்கிறது. இவற்றில் பாலுணர்வை எல்லா பழைய மதங்களும் கண்டிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இது மிகவும் உணர்வு மயமானது. உணர்வு மேலோங்கும்பொழுது அறிவு வேலை செய்யாது. இதனால்தான் பெற்றோர்களும், சமூகமும் காதலுக்கு எதிராகவே இருக்கிறது. ஏனெனில் சாதிக்கட்டுப்பாடு மிகுந்த அந்தக் காலத்தில் இது வெறுத்து ஒதுக்கப்பட்டதாக இருந்தது. ஏன் இப்பொழுதும் கிராமங்களில் சாதிப்பற்று மிக அதிகம். வாழ்க மனு!

(2). அறிவை மழுங்க வைக்கும் இந்த உணர்வு சமூகத்துக்கு ஆபத்தானது என்று எல்லா மதங்களும் ஒருசேர கண்டிக்கின்றன. ஆனால் இயற்கை இயற்கை இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது! தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கே குறி விரைக்கிறது என்று டாக்டர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்! என்னுடைய அணுகுமுறையே புரிந்துகொள்ளுதல்தான். அடக்குதலோ, கண்டித்தலோ அல்ல. அந்த வகையில் பார்க்கும்பொழுது, ஒரு குழந்தை பாலுணர்வால்தான் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை என்பது பாலுணர்வின் ஒட்டுமொத்த உருவம்! இதை எந்த மதவாதியும் மறுக்க முடியாது ...

(3) ஒரு குழந்தை எந்த அளவுக்குப் பாலுணர்வால் நிரப்பப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஆண்மையும் பெண்மையும் கலந்து அழகும் அறிவும் நிரம்பி இருக்கும். மிகச்சிறந்த அறிவாளிகள், அதிகமான பாலுணர்வு கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! அதைப்போல மிகச்சிறந்த கலைஞர்கள் மற்றும் புதுமையைப் படைப்பவர்கள், மிகச் தைரியசாலிகள் எல்லாம் பாலுணர்வு மிக்கவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்த உயிரினத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தத் தெய்வீகப் பாலுணர்வைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டாமா? இதை நான் உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லுவது தவறா?

(4) ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சக்தி அனைத்தும் பாலுணர்வு சக்திதான். அதன் வெளிப்பாடுதான் வேறு வேறு விதமாக இருக்கிறது. ஆன்மீகத்தைப் பொறுத்தவரையில் இந்த சக்தி, கீழான நிலையில் பாலுணர்வாகவும், மேலான நிலையில் தியானமாகவும் இருக்கிறது. மற்ற வெளிப்பாடுகள் எல்லாம் இந்த இரண்டுக்கும் இடையேதான் பல பரிமாணங்களில் அமைந்திருக்கின்றன. இப்பொழுது பாலுணர்வைப் பற்றி ஆழமாகப் பார்ப்போம்.

(5). பாலுணர்வை நீங்கள் எவ்வளவு தீவிரமாக அடக்குகிறீர்களோ அவ்வளவு தீவிரமாக ஆழமாக அது உங்கள் பிரக்ஞையற்ற மனதில் (Unconscious Mind) சென்றுவிடுகிறது. இந்த அடக்குதல் உங்களிடம் தீவிரமான ஆவலை ஏற்படுத்துகிறது. அப்பொழுது உங்கள் கண்கள் முழுவதும் காமம் தான் வழியும். நீங்கள் பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்கும் இந்தப் போலிச்சாமியார்களின் கண்களைச் சற்று உற்று பாருங்கள் புரியும்! அதிகமான காம உணர்வு அதிகமான கற்பனையால் விளைகிறது. நீங்கள் அழகானவள் என்று நினைக்கும் ஒரு பெண்ணையோ..... நீங்கள் அழகானவன் என நினைக்கும் ஒரு ஆணையோ நெருங்கிச் சற்று ஆழமாகப் பாருங்கள். அப்பொழுது உங்கள் கற்பனையான அதீத அழகு மறைந்து உண்மை தெரிய ஆரம்பிக்கும். இந்தச் சஞ்சலத்துக்கு நம் மனம்தான் காரணம் என்று புரிந்து திடுக்கிடுவீர்கள்!
#ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இதுதான் முக்கிய காரணம். ஒருசில தவறுகள் நடக்கலாம். ஆனால் இந்த முறை மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு பெண்ணின் அழகு, அவளுக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தது. தூரம் அதிகமாக அதிகமாக அழகு கூடும்! தூரம் குறையக் குறைய அழகும் குறையும்! இதை உங்கள் அனுபவத்தில் புரிந்துகொள்ளலாம்.

(6) இந்த பூனா ஆசிரமத்தில் 100 -க்கு 90 சதவிகித ஆண்களும் பெண்களும் நட்பு முறையிலேயே பழகுகிறார்கள். மீதமுள்ள 10 சதவிகித பேர்கள் பாலுணர்வால் உந்தப்பட்டால், அவர்களாகவே இதை விட்டு வெளியேறி விடுகிறார்கள். பிறகு அவர்கள் சமநிலை அடைந்து திரும்புகிறார்கள். ஆண்களும், பெண்களும் கூடும் இடத்தில் இது தவிர்க்க முடியாததுதான். ஆனால், இங்கு அதீத கவர்ச்சியும் இல்லை; காமமும் இல்லை. எப்பொழுது, ஒரு இயற்கையான உணர்வை அங்கீகரித்து, அதைப் புரிந்துகொண்டு அதனுடன் இயைந்து விழிப்புணர்வாகச் செல்கிறோமோ அப்பொழுது நம்மிடம் ஒரு சமநிலை (Balance) ஏற்படுகிறது. இந்த ஆசிரமத்தில் அந்த சமநிலையில்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இங்கு வரும் ஆணும், பெண்ணும் காம உணர்வு மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவேதான், முதலில் வரும் வெளியாட்கள் இந்த ஆஸ்ரமத்தைப் பார்த்து அருவருப்பு அடைகிறார்கள்; திடுக்கிடுகிறார்கள். இவர்கள்தான் இங்கு 'எல்லாம் நடக்கிறது' என்று பிரச்சாரம் செய்பவர்கள். இதற்கு காரணம் நான் அல்ல. உங்களுடைய மதகுருமார்களும், பாதிரிமார்களும்தான்! ஆரம்பத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் இங்கு இருந்தால் அவர்களிடம் ஒரு சமநிலை ஏற்படுகிறது. பிறகு அவர்களிடம் அமைதியும் ஆழ்ந்த இன்பமும் ஏற்படுகிறது. பெண்களின் கவர்ச்சி மெல்ல மெல்ல தேய ஆரம்பிக்கிறது. இதை ஒருவர் அனுபவத்தில்தான் புரிந்துகொள்ள முடியும்.

(7). பாலுணர்வு நான்கு நிலைகளைக் கொண்டது. இதைச் சற்று ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். அதைப் பற்றியெல்லாம் உங்கள் மதகுருமார்கள் ஒருக்காலும் சொல்லமாட்டார்கள். ஏனெனில் இது தீண்டத்தகாத சமாச்சாரம் (Untouchable Matter).

A) முதல் நிலை: சுய பாலுணர்வு (Auto Sexual).
ஒரு குழந்தை முதலில் தன் அழகிய உடலை மிகவும் நேசிக்கிறது. தன் கட்டைவிரலை சூப்பும்பொழுது அதற்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது. பிறகு வயது ஏற ஏற அது தன் பாலியல் உறுப்போடு விளையாடுகிறது. அப்பொழுது அது பேரானந்தம் கொள்ளுகிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் அதற்குத் தெரியாது. இது இயற்கையான உணர்வு. இதில் எந்தத் தவறும் இல்லை. பெற்றோர்கள் வீணாகக் குழப்பம் அடைய வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது அந்தப் பாலுருப்பையும், கைவிரல்களையும் சுத்தம் செய்து வைத்திருத்தல்தான். தயவு செய்து அதைக் கண்டிக்காதீர்கள். அடிக்காதீர்கள். (இந்த அடக்கு முறையே பயமாக, அருவருப்பாக ஆழ்மனதில் பதிகிறது)
#இன்னும் சிறிதளவு வயது கூடி சுமார் 3 - லிருந்து 4 - வயதாக இருக்கும்பொழுது இது ஏதோ பழக்கமாகிவிடுமோ என்று அஞ்சி சமூகம் அவன்மேல் பாய ஆரம்பிக்கிறது. 'அதைத் தொடாதே, அது அசிங்கம், பார்ப்பவர்கள் உன்னை வெறுப்பார்கள்...... இப்படிச் சொல்லி கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் கோபத்தில் அவனை அடிக்கிறார்கள். அவன் புரியாமல் பெற்றோர்மேல் கோபம் கொள்ளுகிறான். மறுக்க ஆசைப்படுகிறான். அது முடியாததால் அழ ஆரம்பிக்கிறான். தன் மகிழ்ச்சியில் இவர்கள் குறுக்கிடுகிறார்கள் என்று வஞ்சம் கொள்ளுகிறான். ஒருவித குற்ற உணர்வு அவனுடைய ஆழ்மனதில் பதிய ஆரம்பித்துவிடுகிறது. பிறகு அவன் பாசாங்கு செய்கிறான். பொய் சொல்ல ஆரம்பிக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு தேர்ந்த தந்திரசாலியாகிறான். அவன் பெற்றோர்களை ஏமாற்ற நினைக்கிறான். நல்ல நடிகனாகிவிடுகிறான்! இப்பொழுது பெற்றோர்கள் அவனை (அல்லது / அவளை) முழுமையாகக் கெடுத்துவிட்டார்கள் - நல்லவனாகத் திருத்த நினைத்து. இந்த நிலையிலேயே பெரும்பாலோர் நின்றுவிடுகிறார்கள். இதனால் என்ன நேரிடுகிறது? இந்த உலகம் முழுவதும் சுய இன்பம் (Masturbation) காணுதல் பரவலாகக் காணப்படுகிறது! இதனால் மருத்துவம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது. ஆனால் இது பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால் வாலிபத்தில் பாலுணர்வு இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. விந்து முந்தி வருவதைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால் மணவாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். அத்துடன் இவர்களில் சிலர் பரம்பரை நாட்டு வைத்தியர் என்று சொல்லிக்கொண்டு, ' சுய இன்பம் உங்கள் அறிவை மங்கச் செய்யும், ஆண்மையைப் பாதிக்கும், கண்பார்வை மங்கும், உடல் இளைக்கும்.....' என்று பல குற்ற உணர்வுகளை உங்களிடம் விதைப்பார்கள். இந்தக் குற்ற உணர்வு உங்கள் ஆழ்மனதில் பதிந்து அவர்கள் சொல்லியபடியே வேலை செய்துவிடும்!
சுய இன்பத்தால் ஏற்படும் விந்து இழப்பில் எந்த சத்துப்பொருளும் கிடையாது! ஆனால் விந்து மெதுவாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இது ஒன்றுதான் பிரச்சினை. இதற்குத் தகுந்த டாக்டரைப் பார்த்தால் சரி செய்துவிடலாம். இப்பொழுது நல்ல மருந்துகள் இருக்கின்றன.
ஆகவே குழந்தைகள் அதன் இயல்பிலேயே தைரியமாக வளர அனுமதியுங்கள். வயது ஏற ஏற அவனிடம் மெல்ல மெல்ல விழிப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் கூடுகிறது. ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? சிறு பிள்ளைகள் கிட்டிப்புல், சடுகுடு போன்ற விளையாட்டுக்களில் மிக மிக ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் சுமார் 10 - லிருந்து 14 வயது காலத்தில் அது எப்படி மறைகிறது? அந்த ஆர்வம் எங்கே போயிற்று? பிறகு ஏனோதானோ என்று பார்த்த ஆண், பெண் பார்வையில் எப்படி ஒரு ஆழம், ஒரு கவர்ச்சி ஏற்படுகிறது? எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலைதான்! ஆகவே பழக்கம் எல்லாம் வயதுக்கு ஏற்ற மாதிரிதானே மாறும். ஆனால் இதில் ஒருசில விதிவிலக்குகளும் உண்டு! அதைப் பார்த்து சஞ்சலப்பட வேண்டாம்
.......அதைப் பார்த்து சஞ்சலப்பட வேண்டாம் .......

B). ஓரினச்சேர்க்கை (Homosexual)
இப்பொழுது அந்தக் குழந்தையை அதன் இயல்பிலேயே விட்டால், தன் உடலில் தானே இன்பம் காணுவதிலிருந்து மாறி தன் தன் இனத்தைச் சேர்ந்த பிற ஆண் / பெண் உடலை நேசிக்கும். இது சுமார் 14 - லிருந்து 18 வயதில் இருக்கும். ஆனால் இதில் பெரும்பாலோர் ஈடுபடுவதில்லை. காரணம் அந்த மனதுடையவர்கள் கிடைப்பது கடினம். பெரும்பாலோர் முதல் கட்டத்திலேயே நின்றுவிடுவார்கள். மேலும் இதைச் சமூகம் ஒருக்காலும் அனுமதிப்பது இல்லை. அப்பொழுது அவர்கள் அந்த நபரை நினைத்துக்கொண்டு சுய இன்பம் காணுகின்றனர். ஆனால் ஒரு சிலர் கூடி வாழவும் செய்கின்றனர். இதற்கு அவர்களது உடலில் உள்ள பாலுணர்வு ஹார்மோன்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் 100 - க்கு 95 சதவிகித மக்கள் அடுத்த கட்டத்துக்குத் தானே செல்லுகின்றனர்.

C). மாற்று இனச் சேர்க்கை (Heterosexual)
பிறகு இந்த மூன்றாவது மாற்று இனச்சேர்க்கை இயல்பாக உண்டாக ஆரம்பிக்கிறது. ஆனால் உடனே இதற்குச் சமூகம் இடம் கொடுப்பது இல்லை. முக்கியமாக ஆண் பொருளாதாரத்தில் தனித்து நிற்க முடியுமா என்று பார்க்கிறது. ஒரு ஆணை அவன் சம்பாதிப்பதை வைத்து தேர்ந்தெடுக்கிறது. ஆனால் காதலிப்பது என்பது ஆண் / பெண்களிடையே சகஜமாகிறது. இதற்குச் சமூகம் மிகப்பெரிய முட்டுக்கட்டை போடுகிறது. காரணம் பல இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் ஒரு இனம் புரியாத கவர்ச்சி ஏற்படுகிறது. இயற்கை தன் விளையாட்டை மிகத் தாராளமாகவே அவர்களிடம் செய்திருக்கிறது! இப்பொழுது கவிதை, ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் என்று எல்லாக் கலைகளும் பிறக்கின்றன. ஆண், பெண்ணில் கரைய நினைக்கிறான். பெண், ஆணில் கரைய நினைக்கிறாள். அப்பொழுது உடல் இரண்டாக இருந்தாலும் ஆன்மா ஒன்றுகிறது. இதுதான் மனமற்ற நிலையின் அகங்காரமற்ற தன்மையின் முதல் அனுபவம் எனலாம்.
ஒரு பெண் கலவியின்போது உச்ச இன்பத்தில் மனம் செயல்படாமல் கண்டபடி கத்துவாள். 'ஐயோ என்னைக் கொல்லாதே!' என்றுகூட கூவுவாள். இது ஏன்? உச்ச இன்பத்தில் அவள் இறப்புணர்வையும் தொடுகிறாள். காரணம் மனம் பூரணமாக இறக்கிறது!

D). பிரம்மச்சரியம் (Celibacy):
மேற்கண்ட நிலையை உணர்ந்த பிறகு, எப்படி ஒரு ஆண் / பெண் மற்றவர் துணையில்லாமல் அந்த நிலையை அடைவது என்று ஒரு ஆவல் இயல்பாக ஏற்படும். ஏனெனில் ஒருவரைச் சார்ந்து இருப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் கொடுக்கும். ஆகவே இந்த மாற்று இனச்சேர்க்கையில் உச்சத்தன்மையை அடைந்தவர்கள் வேறு முறைகளின் மூலம் - உதாரணமாக யோகம், தந்திரா தாவே (TAO) மூலம் அதை அடைய முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். ஆன்மீகத்தில் இது சாத்தியம்தான்! ஏனெனில் ஒரு ஆணின் மன ஆழத்தில் ஒரு பெண்ணும், ஒரு பெண்ணின் மன ஆழத்தில் ஒரு ஆணும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களது பிறப்புக்கு ஒரு ஆணும் பெண்ணும்தான் காரணம். ஆகவே, ஒவ்வொரு ஆணும் / பெண்ணும், பாதி ஆணாகவும் / பாதி பெண்ணாகவுமே இருக்கிறார்கள். அப்போது, தன்னுள்ளே உள்ள ஆணோடு ஒரு பெண்ணும் அடுத்து தன்னுள்ளே உள்ள பெண்ணோடு ஒரு ஆணும் சேரக்கூடாது? நீங்கள் வெளியே உள்ள ஆணோடு அல்லது பெண்ணோடு சேரும்பொழுது உங்கள் உள்ளே உள்ள பெண்ணோடு / ஆணோடுதான் சேர்ந்து உண்மையான கலவி இன்பத்தை அனுபவிக்கிறீர்கள். அப்பொழுது வெளியே உள்ள மாற்றுப் பாலினத்தவர் வெறும் தூண்டுகோலாகவே இருக்கின்றனர். உங்களிடம் ஆண்மை இல்லாதபொழுது விந்து சுரக்காதபொழுது உங்களை எந்த அழகியாலும் தூண்ட முடியாது. கிளர்ச்சி அடையச் செய்ய முடியாது. அடுத்து இப்பொழுது அந்த உணர்வோடு உங்கள் தியானத் தன்மையைக் கலக்கவும். அதாவது அந்த இன்ப உணர்வை ஒரு சாட்சியாக நின்று பார்க்கவும். இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். இதுதான் உண்மையான பிரம்மச்சரியம். இந்த நிலையில் வெளிப்படையான காமம் முற்றிலும் மறைந்துவிடுகிறது. இப்பொழுது உங்களுக்கு வெளியில் எந்த ஆணும் / பெண்ணும் தேவையில்லை. இது ஒரு நிரந்தரமான திருமணம்! இப்பொழுது உங்களால் நினைத்த நேரத்தில் அந்த உச்சத்தன்மையைத் தொட முடியும். ஒரு புத்தர் அந்த நிலையில் தொடர்ந்து இருக்க முடியும்.
இப்பொழுது சிற்றின்பம், பேரின்பமாக மாறுகிறது! நான் இப்பொழுது அந்த நிலையில்தான் இருக்கிறேன். அந்த நிலைக்கு உங்களையும் அழைக்கிறேன்! அந்த நிலையை அடைந்தவன் ஒருக்காலும் பிற பெண்களை அல்லது பெண்ணானால் ஆண்களைக் காமத்தோடு பார்க்க முடியாது. ஏனெனில் அது தேவையில்லை. என் கண்களைப் பாருங்கள் புரியும்!
என்னுடைய காம அனுபவங்கள் எல்லாம் பல பிறவிகளின் ஞாபகங்கள்தானே தவிர, இந்தப் பிறவியில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. நான் பல பிறவிகளில் புத்தாவாகவும், ஜோர்பாவாகவும் இருந்திருக்கிறேன். இந்தப் பிறவி நான் ஞானமடைவதற்காகவே ஏற்பட்டது. இனிமேல் எனக்குப் பிறப்பு இல்லை. இதுதான் என் கடைசிப்பிறவி"

ஓஷோ

Post a Comment

0 Comments