சீடன் மற்றும் குரு..ஜென் ஞான கதைகள்

ஓஷோ ஜென் ஞான கதைகள்  <3 

சீடன் மற்றும் குரு 💝

மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் தியானம் கற்றுத் தரவில்லையே என்று கேட்டான் சீடன். ஜென்குரு, இன்றில் இருந்து உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார்.



அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். அந்த இளைஞன் புத்தமத நூல்களை படித்துக் கொணடிருக்கும்போது பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார்.

அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட அவனால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது விழும் . நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான்.

குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை.

"கவனமாயிரு, உணர்வோடு இரு."

அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.

தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தமத நூல்களை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான்.

மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான்.

மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

பின் ஒரு நாள் குரு அவனிடம் கூறினார் .

நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். என்றார்.

நாளை காலை அவன் புறப்படப் போகிறான்.

புறப்படும் நாள் அன்று குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார்.

அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறையாவது இந்த குருவை அடிக்க வேண்டும்என்று தோன்றியது.

இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம்.என எண்ணினான்.

அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான்.

அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை.

இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல அதிலும் நான் உன் குரு.. என்றார்.

இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.

குரு கூறினார் ,

ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும்.

முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய்.

அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும்.

உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும்.

அப்போது நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். எல்லாவற்றையும் பிரதிபலிக்க ,மற்றும் உணர உன்னால் முடியும் .
---------------------------------------------------------------

அரிய தியான நுட்பம் இந்த கதையில் உள்ளது , இந்த கதையை  தியானியுங்கள் .

Post a Comment

0 Comments