எது நல்ல நாள்

 சாக்ரடீஸ் மரணத்தருவாயில் இருந்தார். அவருக்கு விஷம் அளிக்கப்பட்டு விட்டது. அவர் நகைத்துக் கொண்டிருந்தார். அவரது சீடர் கிராடோ, "நகைக்கிறீர்களே! எங்கள் மனம் துடிக்கிறது. கண்ணீர் பெருகுகிறது. இது வருந்த வேண்டிய நிலையல்லவா?” என்று துடித்தார்.


சாக்ரடீஸ் "வருத்தம் எங்கே இருக்கிறது, இறந்து விட்டால் முழுவதுமாக இறந்து விட்டால், வருத்தம் ஏது? ஏனெனில் துக்கத்தை அனுபவிக்க யாரும் எஞ்சியில்லை.


இறந்து பின்னும் நான் தங்கியிருந்தாலும் வருத்தம் ஏது? சென்று விட்டது நான் அல்லவே! நானாக இருந்தது இருக்கிறதே!''


எது பறித்துக் கொள்ளப்பட்டதோ, அது என்னுடையதல்ல. அதனால் எனக்கு எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியே.''என்றார


மன்சூரைக் கண்ட துண்டமாக வெட்டினர். காலைத் துண்டித்தனர். கைகளை வெட்டினர். கண்களைப் பிடுங்கினர். இவருக்களித்ததை விடக் கொடுமையான தண்டனை உலகில் எப்பொழுதும் எவருக்கும் அளிக்கப் பட்டதில்லை.


ஏசுவை விரைவில் கொன்று விட்டனர். காந்தியையும் உடன் மரணமாகச் சுட்டுவிட்டனர். சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தனர். மனித குல சரித்திரத்திலேயே மன்சூருக்கு அதிக வேதனையை அனுபவிக்க நேர்ந்தது. சித்திரவதை செய்யப்பட்டார்.


அவரது கால்கள் வெட்டப்பட்டபோது பெருகும் இரத்தத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டார்.


ஜனங்கள் கல்லால் அடித்துக் கொண்டிருந்தனர். ''என்ன செய்கிறாய்?” என்று அவர்கள் கேட்டனர்.


அவர், "வஜு செய்கிறேன்," செய்கிறேன்," என்றார். முஸ்லிம்கள் நமாஸுக்கு முன் கைகளைக் கழுவுவதற்கு வஜு என்பார்கள். அவர் தனது குருதியினாலேயே கை கழுவிக் கொண்டார்.


உண்மையான, அன்பான வஜு இரத்தத்தினால் செய்யப்படுகிறது, தண்ணீரால் அல்ல என்று நான் கூறும் சொற்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தனது இரத்தத்தினால் வஜு செய்பவனே நமாஸில் இறங்குகிறான்.


ஜனங்கள் 'பைத்தியம்' என்று ஏசினர். கை கால்கள் வெட்டப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கல்லடி கொடுத்தனர். கண்கள் பிடுங்கப்பட்ட போது அவர், "இறைவா! மன்சூர் வெற்றி பெற்றான் என்பதை நினைவில் வைத்துக் கொள்!” என்று கூவினார்.


ஜனங்கள்,  என்ன விஷயம்? எந்த விதத்தில் ஜயித்தாய்?" என்று கேட்டனர்.


'இறைவனிடம் கூறுகிறேன், இறைவா! நினைவிருக்கட்டும்! மன்சூர் வெற்றி பெற்றான். இத்தனை எதிர்ப்புகளிடையே, ஒருக்கால் என்னால் அன்பை நிறைத்து வைத்துக் கொள்ள முடியாதா என்று பயந்தேன். எனது அன்பு அப்படியே இருக்கிறது.


இவர்கள் எனக்குச் செய்தவை எதுவும் எனக்குச் செய்ததாக முடியவில்லை. அன்பு என்னுள் இருக்கிறது, முன் போலவே! அன்பு நிறைந்தே இருக்கிறது. இதுவே எனது பிரார்த்தனை, இதுவே எனது வழிபாடு!' என்றார்.


அப்பொழுதும் அவர் சிரித்தவாறு இருந்தார். ஆனந்தமாக இருந்தார்.


நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை ஏழையாக இருந்தார். அவர் சிரமப்பட்டுத் தனக்காக ஒரு வீடு கட்டினார். ஏழையாகவும் இருந்தார். விஷயமறியாதவராகவும் இருந்தார். ஏனெனில் இதற்கு முன்பு வீடு கட்டியதில்லை.


எந்தவிதத் திறமையும் இன்றிக் கட்டிய வீடு அது. கட்டி முடித்து நாங்கள் குடிபுகக் கூட இல்லை. முதல் மழையிலேயே அது இடிந்து விட்டது. நாங்கள் சிறுவர்கள். மிகவும் வருந்தினோம். அவர் கிராமத்திற்கு வெளியே இருந்தார்.


நான் ஓடிச் சென்று அவரிடம், 'வீடு விழுந்து விட்டது! மிகவும் ஆசையுடன் புது வீட்டிற்குச் செல்வோம் என்றிருந்தோம். எல்லாம் மண்ணாயிற்று!' என்றேன்.


அவர் கிராமத்திற்குள் வந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். "இறைவனுக்கு நன்றி!" என்று நெக்குருகினார். '


ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு விழுந்திருந்தால் எனது ஒரு குழந்தை கூடப் பிழைத்திருக்காது!' என்று கூறிச் சந்தோஷப்பட்டார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்த வீடு எட்டு நாட்களுக்கு

முன் விழுந்ததைப் பற்றிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். எட்டு நாட்களுக்குப் பிறகு விழுந்திருந்தால் மிகவும் பயங்கரம்.


பலர் துன்பத்தின் எதிரே சிரித்தவாறு ஆனந்தமாக இருந்திருக்கின்றனர். நாம் வாழ்வில் எதிரேயும் வருத்தமும் அழுகையுமாக இருக்கிறோம். இது தவறு.


எந்த வருத்தமான பாதையும், எந்த துக்கம் நிறைந்த சித்தமும், எந்தப் பெரிய சாதனையையும் செய்ய முடியாது. சாதனைக்கு உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்த சித்தம் தேவை.


அதனால் இருபத்து நான்கு மணி நேரமும் உற்சாகத்தைப் பழகுங்கள். இவை பழக்கங்கள் மட்டுமே. வருத்தம் ஒரு பழக்கமே. நீங்களே ஏற்படுத்திக் கொண்டது.


உற்சாகமும் ஒரு பழக்கமே. அதை ஏற்படுத்திக் கொள்ள முடியும். உற்சாக மலர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள வாழ்க்கையின் ஒளி நிறைந்த பகுதியைக் காண வேண்டியது அவசியம். இருளான பகுதிகளை அல்ல.


இப்படியும் வாழ்க்கையை நோக்கலாம். இவ்விதம் பார்ப்பவர்களது வாழ்வு மிகுந்த இன்பமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அனைத்தும்!


வாழ்க்கை என்று எதுவும் இல்லை. நீங்கள் பார்ப்பதைப் பொறுத்து உங்கள் பிடிமானம், உங்கள் எண்ணம், உங்கள் திருஷ்டி கோணம் அனைத்தையும் உருவாக்குகிறது. உருமாற்றுகிறது.


இதையே மகிழ்ச்சி என்கிறேன். மூன்றாவது காணும் நிலை. நாம் மகிழ்ச்சியுடன் இருப்பது. மரணத்தையும், துக்கத்தையும் பொய்யாக்கி விடும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்போம்.


மரணமும் துக்கமும் கூனிக் குறுகி மடிந்து விடும் அளவுக்கு ஆனந்தமாக இருப்போம். 'மரணமும் துக்கமும் இருப்பதே தெரியாதபடி மகிழ்ச்சியுடன் இருப்போம்.'


உலகம் அதன் இயல்புக்கு சென்று கொண்டிருக்கிறது.

இரண்டு இரவுகளுக்கு ஒரு பகல் என்பவன் துக்கத்தில் இருக்கிறான்.


ஒரு இரவுக்கு இரண்டு பகல் என்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.


மகிழ்ச்சியும் துக்கமும் உங்கள் கைகளில் தான் உள்ளது.


__ஓஷோ.



Post a Comment

0 Comments