மனமற்ற நிலையை எட்டும் போது

 மனமற்ற நிலையை எட்டும் போது , பைத்தியக்காரத்தனம் போலவே தெரியும்,அது ஆத்மாவின் இருண்ட இரவு ,ஆத்மாவின் பைத்தியக்கார இரவு. மதங்களும் இதைக்குறிப்பிட்டுள்ளன. ஆனால் , அந்த நிலையை அடைவதற்கு முன் ஒரு குருவைத் தேடிக்கொள்ள வேண்டும். அவர் உதவுவதற்கும் , ஆதரிப்பதற்கும் உங்கள் அருகில் இருப்பார். நீங்கள் விலகி நகரும் போதெல்லாம் , அவர் அருகிலிருந்து , நம்பிக்கை தந்து ஊக்கப்படுத்துவார். அவர் புதியதை விளக்கிச்சொல்வார். குரு என்பதன் பொருள் இதுதான்,விளக்க முடியாததை விளக்குபவர். சொல்ல முடியாததைச்சொல்பவர். காட்ட முடியாததைக்காட்டுபவர். 


உங்கள் பாதைக்குத்துணை நின்று பயணத்திற்கான வகையை வகுத்துத்தருபவர். அவர் இல்லாவிட்டால் நீங்கள் வழி தப்பிச் சென்று விடுவீர்கள். ஆனால் , ஒன்றை மறந்துவிட வேண்டாம். தப்புவதற்கு வழியே இல்லை. தப்பிச்செல்ல முயன்றாலோ , புத்தி தடுமாறிப்போகும். அப்படிப்பட்டவர்களை சூஃபிக்கள் , 'மஸ்டாஸ்' என்று குறிப்பிடுவார்கள். இந்தியாவில் அப்படிப்பட்டவர்களுக்கு "பைத்தியக்காரப் பரமஹம்சர்கள்" என்று பெயர். நீங்கள் பின்னுக்குத் திரும்பிச்செல்ல முடியாது. ஏனென்றால் , அது அங்கே இல்லை. முன்னே போகவும் முடியாது. அங்கே இருப்பது இருள். நீங்கள் திகைத்துத் தடுமாறி நடு வழியிலேயே மாட்டிக் கொள்ள நேரும். 


அதனால்தான் புத்தர் ,"குருவைப் பெற்றவன் பாக்கியசாலி" என்று குறிப்பிட்டார். ஆனால் , நான் குருவில்லாமல் தான் பாடுபட்டு வந்தேன். தேடினேன். கிடைக்கவில்லை. தேடாமல் நான் இருக்கவில்லை. நீண்ட காலம் தேடினேன் . எனக்குக் கிடைக்கவில்லை. குரு கிடைப்பது அரிது. 'இல்லாமல்' இருப்பவர் கிடைப்பது அரிது. கிட்டத்தட்ட இல்லாமலே போனவரைக்கண்டுபிடிப்பது எளிதன்று. தெய்விகத்திற்குக் கதவாக இருப்பவர் , தடுத்து நிறுத்தாத திறந்த கதவாக இருப்பவர் , நுழைவாயிலாக இருப்பவர் கிடைப்பது அரிதினும் அரிது. 


சீக்கியர்கள் தம்கோயிலை 'குருதுவாரா' என்று குறிப்பிடுகிறார்கள். குருவின் கதவு என்பது அதன் பொருள். அதுதான் குருவுக்கான சரியான விளக்கம் அவர் ஓர் கதவு. இயேசு திரும்பத் திரும்பச்சொன்னார்.“ நானே வாசல் , நானே வழி , நானே உண்மை" என்று சொன்னார். “ என்னைப்பின்பற்றி வாருங்கள். என் வழியாகச்செல்லுங்கள். என் வழியாகச் செல்லாதவரை நீங்கள் கண்டுகொள்ள , சென்று சேர முடியாது"என்று சொன்னார். சில சமயம் குருவில்லாமலும் நிகழ்ந்து விடுவதுண்டு. குரு கிடைக்காமற்போய் விட்டால் , குருவில்லாமல் முயல வேண்டியதுதான் . ஆனால் , குருவின் துணையில்லாத வழிப் பயணம் மிகவும் கடுமையானது. 


ஓராண்டுக் காலம் என்ன நடக்கிறதென்றே எனக்குத் தெரியவில்லை. என்னை உயிரோடு வைத்துக்கொண்டிருப்பதே அந்த ஒரு வருட காலத்தில் பெரிய சிரமமாக ஆகிவிட்டது. எல்லாப் பசியும் சுத்தமாகப் போய்விட்டது. பல நாட்கள் கடந்தாலும் பசியே தெரியவில்லை ; தாகமும் ஏற்படவில்லை. என்னையே கட்டாயப்படுத்தி உண்ணவும் பருகவும் வேண்டியதாகிவிட்டது. உடலே இல்லாதது போல் ஆகிவிட்டது. நான் இந்த உடலில்தான் இன்னும் இருக்கிறேன் என்பதற்காக உடலை வருத்த வேண்டியதாகி விட்டது. 


தலையைச் சுவரில் முட்டுவேன். வலிக்கிறதா என்று பார்ப்பேன். வலித்தால் , நான் , இன்னும் கொஞ்சம் உடலில் இருப்பதாகப் பொருள். தினசரி ஐந்து முதல் எட்டு மைல் வரை நான் ஓடுவேன். அனைவரும் எனக்குப் பைத்தியம் என்றே முடிவு கட்டிவிட்டார்கள். ஏன் அவ்வளவு தூரம் ஓட வேண்டும்? ஒரு நாளைக்குப் பதினாறு மைல்களா? அது நான் இருக்கிறேனா என்பதை உணர்வதற்காக! என்னுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக ,புதிதாக நிகழப் போவதைக் காணும் பக்குவத்தைக் கண்கள் பெற வேண்டும் என்பதற்காகவே அந்த ஓட்டம். 


எனக்குள் நானே ஒடுக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. யாரிடமும் நான் பேசுவதில்லை. பேசினால் , அர்த்தமுள்ளதாக இருப்பதில்லை. ஒரு முழு வாக்கியம் பேசுவதே சிரமமாக இருந்தது. ஒரு வாக்கியத்தின் நடுவிலேயே , நான் என்ன ஆரம்பித்தேன் என்பது மறந்து போய்விட்டது. எங்காவது போய்க்கொண்டிருக்கும்போது , நடு வழியில் , எங்கே போகிறோம் என்பது மறந்துவிட்டது. மறுபடியும் திரும்பிப் போக வேண்டியிருந்தது. ஒரு புத்தகத்தை ஐம்பது பக்கங்கள் படித்த பிறகு ,' என்ன படித்துக் கொண்டிருக்கிறோம்?' என்பது மறந்தே விட்டது. 


ஒரு முழு வாக்கியத்தை முடிப்பது கூடச்சிரமம். என் அறைக்குள் தாழிட்டு முடங்கிக் கொண்டேன். எதுவுமே பேசுவதில்லை என்று முடிவெடுத்தேன். பேசினால் , என் பைத்தியக்காரத்தனம்தான் வெளிப்படும். ஓராண்டுகாலம் இந்நிலை நீடித்தது. தரையில் மல்லாக்காப்படுத்துக் கொண்டு , விட்டத்தைப்பார்த்தபடி ஒன்று முதல் நூறுவரை எண்ணுவேன். பிறகு நூறு 

முதல் ஒன்று வரை. ஏதோ எண்ணவாவது முடிகிறதே. என்றாலும் அடிக்கடி மறதி வந்துவிடும். கவனத்தைத் திருப்ப எனக்கு ஓராண்டு ஆயிற்று. 


அப்புறம் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிரமமாகத்தான் இருந்தது. ஆதரிப்பார் யாருமில்லை. நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்,என்னதான் நடக்கிறது என்று சொல்ல யாருமில்லை.


ஆனால் , எல்லாருமே எதிராக இருந்தார்கள். அவர்களால் கண்டிக்க முடிந்தது. நான் என்ன செய்கிறேன் என்று கேட்க முடிந்தது. ஆனால் , அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் எதையுமே செய்யவில்லை. இப்போது எல்லாம் என்னைக் கடந்ததாக இருந்தது. அது நிகழ்ந்துகொண்டிருந்தது. தெரியாமலேயே ஏதோ செய்திருக்கிறேன். கதவைத் தட்டியிருக்கிறேன். கதவும் திறந்து கொண்டது. பல ஆண்டுகள் , எதுவும் செய்யாமல் , சும்மா அமர்ந்தபடி நான் தியானம் செய்து வந்திருக்கிறேன். மெல்ல , மெல்ல , நான் வெளிக்குள் பிரவேசித்து விட்டேன். எதுவும் செய்யாமல் , அங்கே நான் இருக்க முடிந்தது ; ஒரு பார்வையாளனாக.


நீங்கள் பார்வையாளன் அல்ல. நீங்கள் பார்ப்பதே இல்லை. சும்மா இருக்கிறீர்கள். சொற்கள் போதாத நிலை. எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் , அது குறைவாகவே தோன்றும். நான் எதையுமே செய்யவில்லை. படுத்திருந்தேன். அமர்ந்திருந்தேன். நடந்து கொண்டிருந்தேன். என் அடியாழத்தில் செய்கிறவன் இல்லை. நான் விருப்பத்தை இழந்துவிட்டேன். யாராக இருக்கவும் எனக்கு ஆசையில்லை. எங்கே போய்ச் சேரவும் எனக்கு ஆவல் இல்லை. என்னை எனக்குள்ளே தூக்கி எறிந்து விட்டேன். வெறுமை. வெறுமை ஒருவரைப் பைத்தியம் பிடிக்கச் செய்துவிடும். ஆனால் , வெறுமை ஒன்றுதான் இறைவனுக்கான வழி. அதாவது , பைத்தியமாகத்தயாராக இருப்பவர்களே அதை அடைய முடியும். வேறு யாராலும் முடியாது.

Post a Comment

0 Comments